Saturday, July 11, 2009

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை"" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்


2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்


3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி


4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து(குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ


6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.


وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)


أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)


நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பபவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் து}ண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?