Monday, July 25, 2011

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!(வீடியோ)

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?
இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவ முடியுமா? என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.
நன்றி: ராஜ் டிவி
தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கல்விக்கண் திறந்துகொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆகவேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

- அதிரைக்காரன் ஜமால்

Source : http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!(வீடியோ)"

ஹுஸைனம்மா said...

நீங்க சொல்வதிலிருந்து, இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்று தெரிய வருகிறது. எனில், அரசின் உதவி பெறத் தகுதியானவர்தானே?

அதிரை fact said...

நமதூர் சகோதரர்களின் இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகளோடு பிற இணைய தளங்களிலும் வெளியான பயனுள்ள கட்டுரைகளை "ADIRAIFACT" ல் உடனுக்குடன் காணலாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?