தன்னம்பிக்கை பகுதி - சாதனை படைக்க வேண்டுமா?
தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறா மாணவர்களிடம் காரணம் கேட்டேன். வினாத்தாள் மிகவும் கடினமாயிருந்தது பாடத்திட்டத்தை விட்டு வெளியிலிருந்து வினாக்கள் வந்திருந்தன. ஆசிரியர் வகுப்பில் நடத்தாத பாடங்களிலிருந்து வினாக்கள் வந்திருந்தன. முக்கியமான பகுதிகளிலிருந்து வினாக்கள் வரவில்லை. விடைத்தாளை மிகவும் கடுமையாகத் திருத்தி விட்டார்கள். திருத்திய ஆசிரியர் மனைவியிடம் சண்டை போட்டு வந்திருப்பார் போலும் என்னைச் சுழித்து விட்டார். கம்ப்யூட்டர் கோளாறு 82 ஐ 28 என்று போட்டுவிட்டது. இவ்வாறெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் கூறினார்கள். ஆனால் ஒருவருக்கும் கூட நான் சரியாகப் படிக்கவில்லை அதனால் தேர்ச்சி பெறவில்லை என்று பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை இல்லை.
வாழ்க்கையில் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு நாம் நம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம். நல்லது நடக்கிற போது நான்தான் காரணம் எப்படியெல்லாம் உழைத்தேன் தெரியுமா? என்று தம்பட்டம் அடிக்கும் மனிதன் தவறு நடக்கிறபோது மட்டும் மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கிறான்.
கண்ணாடி டம்ளர் விழும் சப்தம் கேட்டது என்னவென்று கேட்டேன் டம்ளர் விழுந்து விட்டது என்று பதில் வந்தது. இன்னொரு சப்தம் கேட்டது என்னவென்று கேட்டேன் மேஜை இடித்து விட்டது என்று பதில் வந்தது. நினைத்துப் பாருங்கள் இந்த மனிதன் முகம் எனக்குப் பிடிக்கவில்லை இவன் கையிலிருக்க மாட்டேன் என்றா டம்ளர் தானாகக் கீழே விழுந்தது? அல்லது இவன் எப்போது இந்த பக்கம் வருவான் இவனை இடிக்க வேண்டுமென்று சபதம் போட்டா மேஜை இடித்தது? என் கவனம் சிதறி டம்ளரை கீழே போtட்டுவிட்டேன். சரியாகப் பார்த்து நடக்காமல் மேஜை மீது இடித்துக் கொண்டு விட்டேன். என்று எத்தனை பேர் தங்கள் செயல்களுக்குப் பொறுப் பேற்றுப் பதில் தருகிறார்கள்?
தான் ஏற்கும் எந்தவொரு செயலுக்கும் தானே பொறுப்பு என்று ஏற்றுக்கொள்கிற மனிதர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தக் கற்றுக் கொண்டவராவார். மகனை ரேஷன் கடைக்குப் போய் அரிசி சர்க்கரை வாங்கி வரச் சொன்னாள் தாய், மகனுக்கு அது பிடிக்க வில்லை கோபம் கோபமாக வந்தது. அதே நேரம் மறுக்கவும் முடிய வில்லை காசு வாங்குவது கார்டு எடுப்பது பை எடுப்பது ரேஷன் கடைக்கு நடந்து போவது அங்கே இரண்டு மூன்று பேரே நின்றிருந்த க்யூவில் நிற்பது எடைபோட்டு வாங்குவது திரும்பிக் கொண்டு வருவது எல்லாமே அவனுக்குப் பெரும் சுமையாகவும் துன்பமாகவும் இருந்தன. அதே சமயம் இன்னொரு வீட்டில் தாய் தனது மகனிடம் இதே வேலையைச் சொன்ன போது இது யார் வீட்டு வேலை என் வீட்டு வேலை என் வீட்டுக்காக எனக்காக நான் செய்கிறேன். நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று மனமுவந்து மகன் ஏற்றுக்கொண்டு அந்த வேலையைச் செய்யும்போது முன்னால் ஒருவனுக்கு எவையெல்லாம் பெரும் சுமையாகத் தெரிந்தனவோ அவையெல்லாம் இவனுக்கு மிக எளிமையாகவும் அனுபவித்து மகிழ்ச்சி அடையக் கூடியதாகவும் இருந்தன.
வீட்டு வேலையாக இருந்தாலும் அலுவலகப் பணியாக இருந்தாலும் சமுதாயப் பணியாக இருந்தாலும் என்னுடைய பொறுப்பு என்று ஏற்று இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கிறபோது அந்தப்பணி சீராகவும் செம்மையாகவும் அமைவதோடு ஆனந்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறது. அடுத்தவர்கள் வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எடுத்துச் செய்ய அஞ்சும் பணியை அல்லது தவிர்த்துக் கொள்ள நினைக்கும் பணியைத் துணிந்து பொறுப்பேற்றுச் செய்யும்போது தான் சாதனைகள் நிகழ்கின்றன.
பொறுப்பேற்பவர்கள் சாதனையாளர்களாக நிலைக்கலாம். தப்பித்துக் கொள்ளவும் தவிர்த்துக் கொள்ளவும் ஏதோ கடமைக்காகவும் நினைப்பவர்கள் சாமான்யர்களாகவே சாகலாம். உங்களுக்கு எது விருப்பம்?
-சேமுமு.
நன்றி : இனிய திசைகள் மாத இதழ்
எண் 27 நரசிம்மபுரம்
சென்னை 600 004
தொலைபேசி : 24936115
0 comments: on "தன்னம்பிக்கை பகுதி - சாதனை படைக்க வேண்டுமா?"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?