Thursday, April 16, 2009

யானை (Elephant)

தரையில் வாழக்கூடிய விளங்கினங்களில் மிகப் பெரியதும் புத்திக் கூர்மையில் மற்றவற்றை மிகைத்த ஆற்றலும் பெற்று விளங்கும் இந்த உயிரினத்தைப் பற்றி அறியாத பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருமே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவருக்கும் அறிமுகம் ஆனது யானைதான்.

யானை என்று சொன்னவுடனே நமக்கு விரைவாக நினைவிற்கு வருவது அதன் தும்பிக்கை அமைப்பாகும். இந்த அமைப்புத்தான் பிரத்யேகமாக இறைவனால் இவற்றிற்குக் கொடுக்கப் பட்ட அருட்கொடையாகும். மனிதனின் கைகள் எந்த அளவிற்கு பயன்பாட்டிற்கு அவனுக்கு உதவியாக இருக்கின்றதோ அதுப் போன்று யானையின் தும்பிக்கை அதற்கு பல வழிகளிலும் உறுதுணையாக விளங்கி வருகின்றது. யானையின் மூக்குத் துவாரங்கள் நீண்ட வளைந்துக் கொடுக்கக் கூடிய தசைப் பிணைப்புக்களினால் இணைந்த இந்த அமைப்பையே தும்பிக்கை என்று அழைக்கின்றோம். இந்த தும்பிக்கை அமைப்பை நினைவூட்டக்கூடிய வகையிலோ அல்லது அதை ஒத்த உடல் அமைப்பையோ பெற்ற விலங்கினங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லுமளவிற்கு இந்த அமைப்பு இவற்றிற்கு மாத்திரமே இறைவனால் பிரத்யேகமான அம்சமாக அருளப்பட்டுள்ளது. இத்தகைய அற்புத உயிரினத்தைப் பற்றி விரிவான முறையில் பார்ப்பதே நம் கட்டுரையின் நோக்கமாகும்.


பண்டையக் காலம் முதல் இன்று வரை யானை மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களின் அந்தஸ்திற்கும் மதிப்பிற்குறிய விலங்காக இருந்து வருகின்றது. பழங்காலங்களில் யானை போர்க் கலங்களில் சிறப்பான இடத்தை வகித்து வந்தன. குதிரைப் படையைப் போன்றே யானைப்படையும் ஒரு அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அம்சமாக இருந்துள்ளதை வலாறுகளில் காணமுடிகின்றது. இப்போது யானையின் பொதுவான சில அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

பல்வேறு புதைப்பொருள் ஆராய்சியின் விளைவாக கண்டெடுக்கப் பட்ட எலும்புக்கூடுகளிலிருந்து முந்தையக் காலங்களில் 600க்கும் மேற்பட்ட யானை வகைகள் ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிகாவைத் தவிர்த்து பூமியின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்ததாக புதைப் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது இரண்டே இரண்டு வகைகள் மாத்திரமே இவ்வுலகில் காணப்படுகின்றன. ஓன்று ஆப்பிரிக்க யானை மற்றது ஆசிய யானை ஆகும். இவ்விரண்டிற்கும் மத்தியில் கண்டவுடன் அறிந்துக் கொள்ளக் கூடிய வகையில் பல வித்தியாசமான அம்சங்கள் உள்ளன.


ஆப்பிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குலம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், சிகப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது.


முழு உடலும் தண்ணீரில் மூழ்கியதன் பின்னரும் தும்பிக்கையை தண்ணீரின் மேலே தூக்கி சுவாசத்தை பெறுவதன் மூலம் களைப்பின்றி நீண்ட தூரம் பயணிக்கும் ஆற்றல் ஒரு சுவாரஸ்யமான அம்சமாகும்.


சாதாரணமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இவைகள் அவசியம் ஏற்படும் போது 40 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லும் ஆற்றல் பெற்றவை. பிரம்மாண்டமான உடல் அளவை பெற்றுள்ள யானைகள் புற் தரையில் மாத்திரமல்லாது கடினமானத் தரையிலும் கூட சப்தமின்றி நடந்து செல்லக் கூடியவை. யானையின் கால்களின் அடிப்புறத்தில் வளரும் மென்னையான சதைப்பகுதி யானை நடக்கும் போது சத்தமின்றி நடக்கவும், அதன் உடலின் எடையை தாங்கி நடப்பதன் மூலம் ஏற்படும் அதிகபடியான அதிர்சியை குறைத்து அதன் உடலைப் பாதுகாக்கும் அம்சமாகவும் விளங்கி வருகின்றது. யானைகள் இவ்வளவு வேகமாக செல்லக் கூடியதாக இருப்பினும் இவைகளினால் வழியில் குறுக்கிடும் சிறிய பள்ளங்களைக் கூட தாவிப் பாய்ந்துச் செல்ல முடிவதில்லை. இருப்பினும் வழியில் குறுக்கிடும் ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகளை எந்த விதமான களைப்புமின்றி எளிதாக கடந்து செல்லும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகளின் முழு உடலும் தண்ணீரில் மூழ்கியப் பின்னரும் கூட அவற்றின் தும்பிக்கையை தண்ணீருக்கு மேலே உயர்த்தி சுவாசத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் மிக நீண்ட தூரம் இவைகளினால் களைப்பின்றி தண்ணீரில் நீந்திச் செல்ல இயலுகின்றது.


உலகில் வாழக்கூடிய உயிரினங்களிலேயே மிக உறுதியான நீண்ட பற்கள் யானையின் தந்தம் ஆகும். யானையின் தந்தம் மிக நீளமான அதன் மேற்புற முன் வரிசைப் பற்களாகும். வருடத்திற்கு 17 செ.மீ வரை வளரக்கூடிய இவைகள் யானை மரணிக்கும் காலம் வரை தொடந்து வளர்ச்சியடைகின்றது. அதிகபட்சமாக இரண்டரை மீட்டர் நீளமும் 45 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது. இதைக் கொண்டு பூமியைத் தோண்டி கிழங்கு வகைகளை உண்பதற்கும், தண்ணீரை பெற்றக் கொள்வதற்கும், மற்ற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இனப் பெருக்கத்தின் போது ஏற்படும் போட்டியில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன. இந்த தந்தம் தான் யானையை வேட்டையாடி அழிக்க முக்கியக் காரணமாக இருப்பவை. இவற்றின் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதனால் இதற்காகவே இவை சட்ட விரோதமாக வேட்டையாடப் படுகின்றன. இவற்றைத் தவிர்த்து யானைக்கு நான்கு பற்கள் அமைந்துள்ளன. நான்கு பற்களும் கடைவாய்ப் பற்களாகும். இவற்றின் முதல் வரி பற்கள் விழுந்தவுடம் பின்புற பற்கள் இரண்டும் முன் வரிசைக்கு இடம் பெயருகின்றன. பின் புறம் புதிய பற்கள் இரண்டு முளைக்கின்றன. இது போல் யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. 40 முதல் 60 வயதிற்க்குள் கடைசிக் கட்ட பற்கள் விழுந்து விடுவதனால் உணவை சரிவர மென்று உண்ண முடியாத நிலை ஏற்படுவதால் செரிமானக் கோளாருகளினால் இறக்கும் நிலையும் சிலவற்றிற்கு ஏற்படுகின்றது.


மேலும் முக்கியமாக அதன் சிறப்பு உடல் உறுப்பான தும்பிக்கை குறிப்பிடத் தக்க அம்சமாகும். சுவாசக் குழாயான மூக்குத் துவாரங்கள் நீண்ட தசைப் பிணைப்புக்களினால் இணையப் பெற்ற இந்த தும்பிக்கை அமைப்பு அதன் பல பயன் பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றன. யானையின் தும்பிக்கை ஏறக்குறைய 1,50,000 தசைப் பிணைப்புக்களினால் இணைக்கப் பட்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக மனிதனின் கைகள் அவனுக்கு எந்த அளவிற்கு உயோகப் படுகின்றனவோ அது போல அவற்றின் தும்பிக்கை அமைப்பு அவற்றிற்கு பல வகையிலும் உதவியாக இருக்கின்றன. சுவாசிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி அவற்றை வாயில் பீய்ச்சிக் குடிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி உடல் முழவதும் செலுத்தி உடல் வெப்ப நிலையை தணித்துக் கொள்வதற்கும், சிறிய புற் பூண்டு வகைகள் முதல் பெரிய மரக் கிளைகள் வரை உடைத்து உண்பதற்கும், தண்ணீருக்கடியில் பயணிக்கும் போது சுவாசத்திற்கும் இதுப் போன்று பல உபயோகங்கள் இவற்றினால் யானைகளுக்கு உண்டு. இந்த தும்பிக்கை அமைப்புத்தான் மனிதர்களினால் பாரம் தூக்கும் வேலைக்கு இவைகளைப் பயன்படுத்தக் காரணமாகும். மிக லாவகமாக தும்பிக்கையைக் கொண்டு பலுவானவற்றை இவைகளினால் தூக்க முடிகின்றது.


அடுத்து அதன் தோல் அமைப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுவோம். இதன் தோல் இரண்டிலிருந்து நான்கு செ.மீ வரை தடிமன் கொண்டதாகும். இவ்வளவு தடிமனாக இருப்பினும் கூட இவைகளின் தோல் அதிக உணரும் திறன் கொண்டதாகும். இவற்றின் தோலில் மிகக் குறைந்த அளவே வியர்வைச் சுரப்பி இருப்பதனால் இவை தங்கள் உடலின் மேற்புறத்தில் கும் மற்றும் குட்டைகளில் புரண்டு உடலில் சேற்றை பூசிக்கொள்கின்றன. அல்லது தங்கள் தலையிலே தாங்களே மண்ணைப் அள்ளிப் போட்டுக் கொள்கின்றன. இதன் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுகின்றன. மேலும் உடலின் மிக முக்கிய இரத்த நாளங்கள் அனைத்தும் அதன் இரு அகன்ற காது மடல்களை கடந்து செல்லுவதால் அதனை அசைப்பதன் மூலம் இரத்தத்தை குளிரச் செய்து உடலின் வெப்பத்தை பெருமளவிற்கு வெளியேற்றுகின்றன. இதுவே இவை தங்கள் காதுகளை அதிகமாக அசைத்துக் கொண்டிருப்பதன் காரணமாகும்.

அடுத்து அதன் புத்திக் கூர்மையைப் பற்றிப் பார்ப்போம். புத்திக் கூர்மையை அளவிட்டு கணக்கிடுவதில் திட்டவட்டமான வரையறையை அறிவியலார்கள் இதுவரை அடையாததால் இவற்றின் புத்திக் கூர்மையை அளவிடும் வியத்திலும் திட்டவட்டமான முடிவுக்கு இதுவரை வர முடியவில்லை. இருப்பினும் இவை புத்திசாலி விலங்கினம் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. மனிதர்களின் மூளையைக் காட்டிலும் மிகப் பெரிய மூளை யானையுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. அதிகப்படியாக இவற்றின் மூளையில் காணப்படும் செரிப்ரல் கார்டக்ஸ் என்னும் இரசாயணப் பொருள் அறிவுத்திறனை அளவிடும் பொருளாக கணித்திருக்கின்றார்கள். மேலும் இவற்றின் புத்திக் கூர்மையான செயல் பாடுகளினாலும் இதன் புரிந்துக் கொள்ளும் திறனின் அடிப்படையினல்தான் சர்க்கஸ் போன்ற கேளிக்கைகளில் இவற்றைக் கொண்டு வியக்கத் தக்க செயல்பாடுகளை செய்ய இயலுகின்றது.

யானையின் மற்றுமொரு முக்கிய வித்தியாசமான அம்சம் தொலைத்தொடர்பு கொள்ளும் முறையாகும். இவைகள் தங்கள் தும்பிக்கையைக் கொண்டு ஒன்றை ஒன்று தொடுவதன் மூலமும் சத்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்கின்றன. 1980 ம் ஆண்டுதான் முதன் முதலாக யானையின் தும்பிக்கையினால் மனிதர்களின் செவிப்புலனினால் கேட்க முடியாத குறைந்த அலை வரிசையைக் கொண்ட சப்தத்தை எழுப்புவதைக் கண்டறிந்தார்கள். இதைக் கொண்டு தொலைத்தொடர்பு கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

யானைகள் காட்டின் சுற்றுப் புற சூழலில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன. அதிகமான அளவிற்கு மரங்களிலிருந்து இலைத் தழைகளை பறித்து உண்பதனால் சூரிய வெளிச்சம் கீழே ஊடுருவிச் சென்று பூமியை அடைய வகை ஏற்பட்டு சிறிய புற்பூண்டு வகைகள் வளர உதவி புரிகின்றன. மிக வெப்பமான காலங்களில் இவற்றால் தோண்டப்படும் தண்ணீர் பள்ளங்கள் மற்ற வனவாழ் விலங்கினங்கள் குடிப்பதற்கும் பயன் படுத்திக் கொள்கின்றன. மேலும் அடர்த்தியான காடுகளில் இவற்றின் குழுக்கள் பயணம் செய்வதனால் ஏற்படும் வழித் தடத்தினை சிறிய விலங்கினங்கள் உட்பட மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. பூமியில் வளரும் புற்பூண்டுகளை அடியோடு பிடுங்கி உண்பதனால் பூமியில் காற்றோட்டம் அதிகரித்து மீண்டும் புதிய புற்பூண்டுகள் வளர வகை ஏற்படுகின்றன.

யானைகள் சராசரியாக 60 வருடம் வாழக்கூடியது. பூமியில் வாழும் உயிரினங்களிலேயே அதிக கர்ப்ப காலம் யானையுடையதாகும். 20 முதல் 22 மாத கர்ப் காலத்தில் ஒருக் குட்டியை ஈன்றெடுக்கின்றன. 4 ஆண்டு இடைவெளியில் தனது 60 ஆண்டுகள் வரை குட்டிகளை போடும் தன்மையைப் பெற்றுள்ளன. குட்டிப் பிறக்கும் போது 120 கிலோ எடையும் ஒரு மீட்டர் உயரமும் உடையதாக இருக்கும். பிறந்த ஓரிரு மணி நேரத்தில் எழுந்து தன் தாயின் முன் கால்களுக்கு இடையே அமைந்த பால் சுரப்பிகளில் பால் குடிக்க ஆரம்பிக்கின்றது. யானையின் பால் சுரப்பி இரண்டு காம்புகளை உடையதாகும்.


தங்கள் உணவிற்காக நீண்ட தூரம் பயணிக்கும் தரைவாழ் உயிரினம் யானை ஆகும்.
தரையில் வாழக்கூடிய விலங்கினங்களில் மிகப் பெரியதும் நன்கு வளர்ந்த ஒரு யானைக்கு இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை என்ற சொல்லுமவிற்கு பலம் வாய்ந்ததும். 60 வருட கால நீண்ட வாழ்நாளைக் கொண்டதும், நல்ல புத்திக் கூர்மையும் உடைய இந்த பிரம்மாண்டமான உயிரினம் ஒரு தாவர உண்ணியாகும். இந்த உயிரினம் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உண்டு ழிப்பதிலேயே செலவழிக்கின்றன. 80 வகையான வித்தியாசமான தாவரங்களிலிருந்து இலை, பட்டை, வேர்கள், கிழங்கு வகைகள், காய், கனி, மொட்டு, போன்றவற்றை தங்களின் உணவாக உட்கொள்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 100 முதல் 300 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. எனவே இவைகளுக்கு குடிக்க தண்ணீரும் அதிகம் தேவைப்படுகின்றது. ஓரு நானைக்கு 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கின்றன.

யானைகள் குழுக்களாக இணைந்து வாழக்கூடியன. ஒரு பகுதியில் காணப்படும் தண்ணீர் மற்றும் தாவரங்களை விரைவில் உண்டு கபளீகரம் செய்வதனால் விரைவில் இடம் மாறிச் செல்லக் கூடிய நிலை இவைகளுக்கு ஏற்படுகின்றன. இவற்றின் ஒரு குழு தங்கள் உணவை பெற ஒரு பருவத்தில் 1000 சதுர கிலோ மீட்டர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு வருடத்தில் இவை தங்கள் உணவிற்காக 5,000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை பயணிக்கின்றன. இது தரையில் வாழும் மற்ற பாலூட்டிகள் செல்லும் தொலைவைக் காட்டிலும் கூடுதலாகும்.

யானைகள் புதியதாக பிறந்த குட்டிகளுக்காக மகிழ்ச்சி அடைகின்றன. மேலும் இறந்த தங்கள் குழுவை சேர்ந்த யானைகளுக்காக கண்ணீர் விட்டும் அழுகின்றன.

யானையின் உணர்ச்சி மயமான வாழ்க்கையைப் பற்றி எழுத சில பக்கங்கள் அவசியமாகும். யானைகள் குழுக்களாக இணைந்து வாழக்கூடியது என்று முன்பு கண்டோம். இவற்றில் உறவு முறைகளுடன் அமைந்த 2 முதல் 29 வயது வரை பலத்தரப்பட்ட வயதுடைய யானைகள் வரை இருக்கும். இவை இறுதி வரை கட்டுக் கோப்புடன் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகமாகி விட்டாலோ அதிலிருந்து சில பிறிந்துச் சென்றுப் புதியக் குழுக்களை அமைத்துக் கொள்கின்றன. ஒருக் குழுக்களைச் சேர்ந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் விதமாக 50 மீட்டர் இடைவெளியிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகின்றன. ருக் குழுவிற்கு அந்த குழுவில் வயது முதிர்ந்த பெண் யானை வழிக்காட்டியாகவும் தலைவியாகவும் செயல்படுகின்றது. அது இறந்த பின்னர் அடுத்த வயதில் முதிர்ந்த பெண் யானை தலைமையை அடைகின்றது.

ஆராய்சியாளர்கள் சமீப காலங்களில் யானையின் நடவடிக்கைகளை ஆராய்ந்து சில அதியமான விசயங்களைக் கண்டறிந்தர். யானைகள் புதிதாக பிறந்த குட்டிகளுக்காக தங்கள் சந்தோசத்தையும், இறந்த தங்கள் குடும்பத்தை சேர்ந்தவற்றிற்காக கண்ணீர் விட்டு அழுவதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிரிந்து திரும்பிய தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யானையின் வருகைக்காக விரிவான முறையிலே வவேற்பை அளிக்கின்றன. வரவேற்கும் விதமாக வித்தியாசமான சத்தத்துடனும் ஒன்றை ஒன்று உரசியும், தலையோடு தலையை இடித்தும், முன் பின்னுமாக நடந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

யானைகளை றக்குறைய 4000 ஆண்டுகளாக மனிதன் தன் உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றான். ஆசியாவில் 13 முதல் 16 ஆயிரம் யானைகள் வரை தொழிலில் பயன்படுத்துகின்றார்கள். இந்த எண்ணிக்கை உலக யானை எண்ணிக்கையில் 25 சதவிகிதமாகும். இரண்டாம் உலகப் போரின் போது பளுவான இராணுவத் தடவாளங்களைத் தூக்கிச் செல்லப் யானையைப் பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகின்றது. இவை வனப்பகுதியிலிருந்து பெரிய மரக் துண்டுகளை வெளியில் எடுத்து வரவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும், பாரத்தை சுமந்துச் செல்லவும், மர அறுப்பு பட்டரைகளிலும் பலவாறாக பயன்படுத்தப்படுகின்றன. யானை 14-ஆம் வயதில் முதன் முதலில் தொழில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு 25 வயதை அடைந்தவுடன் பலுவான மரக்கட்டைகளை சுமந்து கொண்டு வரவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெற்றுள்ள புத்திக் கூர்மையின் காரணமாக இவை விரைவில் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்கின்றன.

25-ஆம் வயதில் இவற்றைக் கொண்டு தொழிலில் பயன்படுத்தி பொருளாதாரத்தை ஈட்டும் யானையின் மேய்பாளனாகிய பாகன் தன் வாழ்நாள் முழுதும் அதனுடனே கழிக்கின்றான். யானையின் வயது ஏற ஏற பாகனுடைய வயதும் ஏறிக் கொண்டுச் செல்வதனால் தனது 50 வது வயதில் ஓய்வு பெறும் வயதை அடையும் போது யானையும் தன் வலுவை இழந்து ஓய்வு பெரும் நிலையை எட்டிவிடுகின்றது. இந்நிலையில் இவ்விருவருக்குமிடையே ஏற்படும் அன்யோன்யமான உறவு பிரிக்க முடியாத வார்த்தைகளினால் விளக்க இயலாத ஒரு உறவாக மாறிவிடுகின்றது. இருவருக்குள் ஆழமான அன்பு ஏற்பட்டு விடுகின்றது. பாகனின் சொல்லுக்கு யானை உடன் கட்டுப்பட்டு நடப்பதையும் மற்றவர்களின் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கருதாமல் இருப்பதையும் கொண்டு நாம் இதை விளங்கிக்கொள்ள முடியும்.

1900 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது 10 மில்லியன் வரை இருந்த யானையின் எண்ணிக்கை 1979ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 1.3 மில்லியன் எண்ணிக்கை மாத்திரமே இருந்ததாக கணக்கிட்டு உள்ளார்கள். மிக மிக வேகமாக குறைந்து வரும் இந்த சதவிகிதத்தினால் விரைவில் இந்த இனம் முற்றிலும் அழிந்து விடுமோ என்று அஞ்சப்படுகின்றது. பல நாடுகளில் மிருக காட்சி சாலைகளில் மாத்திரமே யானையை காணக் கூடிய நிலை இருக்கின்றது. இதை காக்கும் விதமாக இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக விளங்கி வரும் யானைத் தந்தத்தினால் செய்யப்படும் பொருட்களை முற்றிலுமாக இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை செய்து 120 நாடுகள் சட்டமேற்றியுள்ளன. இதன் மூலம் ஓரளவிற்கு சட்ட விரோதமாக வேட்டையாடப்படும் எண்ணிக்கை குறைந்திருப்பினும் கூட அழிவுனுடைய எல்லையில் இந்த இனம் இருப்பதை மறுக்க இயலாது.

இயற்கையான வன சூழ்நிலையில் இவைகளின் இனப்பெருக்கத்தினால் ஏற்படும் எண்ணிக்கை பெருக்கம் அவற்றை தொழிலில் ஈடுபடுத்தும் போது சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் முன் கண்டவாறு யானைகள் ஒரு குழுக்ளாக இணைந்து கட்டுப்பாட்டுடன் ஒரு தலைமையின் கீழ் வாழ்ந்து வருவதனால் சில சமயங்களில் சட்ட விரோதமாக வேட்டையாடக் கூடியவர்களின் இலக்கிற்கு தலைமையை வகிக்கும் யானை பலியாகிவிடுவதனால் அந்த கூட்டத்திற்கு சரியான வழிக்காட்டுதலும் பாதுகாப்பும் இல்லாமல் சிறியத் தலைமுறை யானைகள் கூட்டு சிதைந்து விரைவில் பலியாகும் அபாயமும் நிகழுகின்றது. இதே நிலையில் சென்றால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளுக்கு பின்னர் இந்த உயிரினம் அறவே இல்லாத நிலையை எட்டி யானையின் படங்களை மட்டும் பிள்ளைகளுக்கு காட்டுக் கூடிய நிலை ஏற்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

எல்லா உயிரினங்களையும் மனிதர்களின் பயன்பாட்டிற்கு படைத்ததாக சொல்லும் இறைவனின் இத்தகைய அற்புதமான படைப்பினங்களை, மனிதன் சட்ட விரோதமாக தன் சுயநலத்திற்காக வேட்டையாடி வருவதால் இப்பிரச்சினையை தவிர்க்க இயலவில்லை.

வானங்களில் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்கு பயன்படச் செய்தான். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:13)


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "யானை (Elephant)"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?