Monday, January 10, 2011

கல்வியே உன் விலை என்ன?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சீனா சென்றாயினும் சீர் கல்வி பெற்றிடுக!
கற்கை நன்றே கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி விழிப்புணர்வு நம் சமுதாயம் அடைந்த பயன்கள் என்றால் சொல்லிக்கொள்ளும்படி அதிகம் இல்லை. அடையப்போகும்(எதிர் காலத்தில்) பயன்கள் அதிகம் உண்டு. இன்ஷாஅல்லாஹ்.

சுதந்திரத்திற்காக தங்களின் கல்வியை விட்ட ஒரே சமுதாயம் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். வீரத்தோடு தங்கள் சொத்துக்களையும், உயிர்களையும் சமுதாய சதவீதத்திற்கு அதிகமாக தியாகம் செய்த ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான்.

வெள்ளையனுக்கு சாமரம் வீசியவர்கள், அடிமை சேவகம் செய்தவர்கள். சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட எடுத்த போடாதவர்கள் என்ற பெரும் கூட்டமே வெள்ளையன் விட்டு சென்ற அத்தனை துறைகளையும்: கல்வித்துறை, பத்திரிக்கை துறை, தொழில் துறை, அரசு துறை, இராணுவத்துறை, இப்படி அனைத்து துறைகளையும் தியாகம் என்றால், சுதந்திரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் கூட்டங்கள் தந்திரத்தால் அபகரித்து, தியாகம் செய்த முஸ்லிம்களை சுதந்திரம் கிடைத்த அன்றிலிருந்து திட்டமிட்டு ஓரம் கட்டியது. இரண்டாம்தர குடிமக்கள் நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நரிகளின் திட்டம் இன்று போடப்பட்டதல்ல. மாறாக சுதந்திரத்திற்கு முன்பே திட்டம் போட்டு சரியானபடி முஸ்லிம் வாழும் அனைத்து பகுதிகளையும் புறக்கணிக்க ஆரம்பித்தது. இன்று வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

வெள்ளைக்காரன் முஸ்லிம்களுக்கு அளித்து வந்த இடஒதுக்கீட்டை நரிகள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்த இடஒதுக்கீட்டைத்தான் ஒழித்தார்கள். கல்வியை மார்க்க கல்வி உலக கல்வி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. நம் முன்னோர்கள் படிக்காத சமுதாயமாக ஆகிப்போனதால் வெளிநாட்டில் வேலை தேடும் அவல நிலைக்கு ஆளானார்கள். நரிகள் இந்தியாவை கபளீகரம் செய்து தம்மை வளம், பலம், கல்வி என்று எல்லாவற்றிலும் முன்னேற்றி எம்மை வெல்ல யாரும் உண்டோ? என்று எகத்தாளமாக முஸ்லிம்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சுதந்திரம் கிடைத்த பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த வெகுமதிகள் என்ன? முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கல்வி இல்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, தண்ணீர் இல்லை, சுகாதரா வசதி இல்லை, அரசாங்க துறையில் வேலை இல்லை, இல்லை - இல்லை - இல்லை எதுவுமில்லை என்று அயல்நாடு சென்றார்கள் முன்னோர்கள்.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தியாகமிக்க நல்ல மனிதர்களால் முஸ்லிம் வாழும் பகுதிகளில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு சேவை அடிப்படையில் நடக்க ஆரம்பித்தது. இருந்தாலும் எல்லோருக்கும் கல்வி சென்று சேரவில்லை. வயிற்றுக்கு சோறு இல்லாத பொழுது கல்வி எங்கே கற்பது. நம் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள தனவந்தர்களின் பிள்ளைகளும், ஏழைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களுக்கும் கல்வி கிடைத்து வருகிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இன்றும் அப்படியேதான் நிலைமை உள்ளது. ஆர்வமிக்க ஏழை முஸ்லிம் மாணவர்களின் நிலை இன்றளவும் பரிதாபம்தான் 6 அல்லது 10ம் வகுப்போடு அவனுடைய கல்வி வாசல் அடைக்கப்படுகிறது. மேற்கொண்டு படிப்பதற்கு குடும்ப சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. முஸ்லிம்களால் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டாலும், இந்த உதவிகள் திட்டமிடப்படாத உதவிகளாகவே சென்று கொண்டு இருக்கிறது.

மேற்படிப்பை பற்றியும், அரசாங்க வேலை வாய்ப்பை பற்றியும்  பேசிக்கொண்டு இருக்கிறோம். கல்வியை பாதியோடு விட்டுவிடும் ஏழை மாணவ, மாணவிகளின் நிலையை பற்றி அதிகம் பேசப்பட வேண்டும். இதற்காக சரியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

ஏழை மாணவ, மாணவிகளின் நிலைகள் ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்பட வேண்டும். செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் எப்படியும் படித்து விடுவார்கள். ஏழைகள் பாதியில் கல்வியை விட்டு விடுவதற்கு காரணங்கள் கண்டறிந்து சரியான வழியில் திட்டமிட்டு இவர்கள் கல்வியில் தொடர்ந்து படித்து மேற்படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர உதவிகள் செய்யப்பட வேண்டும்.

எப்படி செயல்பட வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் நம் உறவினர்களில் உள்ள மாணவ, மாணவிகள் என்ன படிக்கிறார்கள், அவர்கள் குடும்ப நிலை என்ன அவர்களால் கல்வியை தொடர முடியுமா? என்று ஆய்வு செய்து நம் வசதிக்கு தக்கவாறு அவர்களின் கல்வி தொடர உதவிகள் நம்மால் செய்யப்பட வேண்டும். மேலும் கல்விக்கு உதவி செய்வதோடு நின்று விடாமல் மாணவன் பள்ளி செல்வதை விட்டால்தான் அவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று தெரிந்தால் அவர்களின் குடும்பத்திற்கும் நிதி உதவி செய்து அவன் படிப்பு பாதியில் தடைபடாமல் தொடர உதவ வேண்டும்.

நம்முடைய ஏழை உறவினர்கள் நம்மிடம் வந்து உதவி கேட்கும்வரை அலட்சியமாக இருக்கக்கூடாது. அவர்களின் நிலை அறிந்து நாமே சென்று உதவிகள் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்களில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொறுப்பு எடுத்து கொண்டால் இதற்கான கூலியை வல்ல அல்லாஹ் நமக்கு தாரளமாக வழங்குவான்.

ஊர் அளவில் செயல்படும் திட்டங்களை பார்ப்போம்;: ஊர் அளவில் ஒரு தன்னலம் பாராத கல்விக்குழு அமைக்கப்பட வேண்டும்.(உதாரணத்திற்கு: அதிரை அறக்கட்டளை என்று வைத்துக்கொள்வோம்) ஒவ்வொரு தெருவிலும் சேவை மனப்பான்மை உள்ள ஒரு குழுவை ஏற்படுத்தி இந்த குழு மூலம் அந்த தெருவில் உள்ள மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களின் கல்வி தரம், குடும்ப பொருளாதார தரம் இரண்டையும் ஆய்வு செய்து, மாணவர்களின் கல்வி தொடர உதவி செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு  வாழ்வாதார வசதி இல்லை என்றால் அவர்களுக்கும் சேர்த்தே நிதி வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் மாணவர்களுக்கு மட்டும்தான் கல்வி உதவி தொகை வழங்குவோம், குடும்பத்திற்கு உதவி செய்ய மாட்டோம் என்றால் 2 ஆண்டுகள் கல்வி உதவி தொகை பெற்றவர்கள் குடும்ப வறுமை காரணமாக கல்வியை பாதியில் நிறுத்தி விடும் அவலம் தொடர்ந்து வருவதை காண முடிகிறது. மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பொருளாதார உதவி சென்றடைய வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் தலைமை குழுவிடம் அறிக்கை சமர்பித்து பொருளாதாரத்தை எப்படி திரட்டுவது என்ற ஆலோசனை செய்ய வேண்டும். அந்தந்த தெருவில்  உள்ள செல்வந்தர்களிடம் பொருளாதாரம் திரட்டப்பட்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்த ஆரம்பிக்க வரும் வரை மலையை பெயர்த்து வேறு இடத்தில் வைக்கும் அளவுக்கு கஷ்டமானதுதான். அல்லாஹ்வின் அருளால் சேவை மனப்பான்மை உள்ள, பெரியவர்களிடமும், இளைஞர்களிடமும் இந்த பணியை கொடுத்தால் இன்ஷாஅல்லாஹ் வெற்றி உறுதி.

இதை விட்டு விட்டு கல்விக்கு மட்டும் உதவி செய்வோம். மேற்படிப்புக்கு உதவி செய்வோம், வேலைக்கு உதவி செய்வோம் என்று சொன்னால் படித்து வந்தால்தானே மேற்படிப்புக்கும், வேலைக்கும் உதவி செய்ய முடியும்.

படிப்புக்கு தடையாக முண்ணனியில் இருப்பது அவர்களின் வறுமை... வறுமை... வறுமை . . . சகோதரர்களே! இதைத்தான் தாங்கள் கவனத்தில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப்பசியோடு படி என்றால் எப்படி படிக்க முடியும். சொல்வது யாருக்கும் எளியது,  வறுமையை கண்டவர்களுக்குதான் அதன் உண்மை புரியும். மாணவர்களின் கல்வியையும், வறுமையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அதிக முக்கியமானது மார்க்க கல்வி - இந்த கல்வியை இரண்டாம் இடத்தில் தள்ளி தனியாக படிக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. காலேஜ் படிப்பை விட்டு விட்டு தனியாக மதரஸாவில் படிக்க கூடிய சூழ்நிலை இல்லை. மார்க்க கல்வியும், உலக கல்வியும் ஒரு சேர தரமாக ஒரே இடத்தில் கிடைக்கும் வரை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் விடுமுறை காலத்தை நன்கு பயன்படுத்தி மார்க்கத்தை நன்றாக போதிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கும், திரும்ப வந்து வீட்டு பாடங்களை எழுதுவதற்கும்தான் மாணவ மாணவிகளுக்கு நேரங்கள் இருக்கிறது. தொழ, குர்ஆன் ஓத அதிக நேரங்கள் கிடைப்பதில்லை என்பது வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது.

எப்பொழுது முஸ்லிம்கள் அதிக வாழும் ஊர்களில் ஆரம்ப படிப்பு முதல் வல்ல அல்லாஹ் தந்த குர்ஆன், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய உண்மையான மார்க்கம் போதிக்க கூடிய கல்விக்கூடங்கள் உருவாகும். உலக கல்வியும் - மார்க்க கல்வியும் சேர்ந்த கல்விக்கூடம் எப்பொழுது வரும் என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரையை முடிக்கிறேன். வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களை நிறைவேற்றித்தர போதுமானவன்.

உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (திருக்குர்ஆன் : 58:11)

குறிப்பு : கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு என்னுடைய ஆதங்கத்தை கவனத்தில் கொள்ளவும். (வறுமை, மார்க்கம் இவை மூன்றிற்கும் சரியான திட்டமிடல் அவசியம்). கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்து பயன்கள் சரியான வழியில் சென்றடைய வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

- அலாவுதீன். S.

http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_10.html

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கல்வியே உன் விலை என்ன?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?