Sunday, December 21, 2008

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதிலும் அதிகமாக நன்மைகள்  இருப்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்? அதனால்தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?