தூயோனைத் தொழ நாடும் போழ்து தூயதோர் அமல் "ஒளு" என்பது " பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம் துவக்கமாய்க் ஓதி உள்ளங்கைகளால் நீரைக் கோதி; உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன் உதடுகளால் "கலிமா"வை விளம்பு: கைகளை நன்றாக அலம்பு நாக்கு வழி; அதனால் அச்சரச் சுத்தமாய் உச்சரிக்கும் இறைவசனம் -உன் நாக்கு வழி....!! பல் விலக்கு; அதனால் பல நோய்கட்கு விலக்கு நாசி துவாரத்தில் தூசிகள் போக்கிட நீர் செலுத்திக் கொண்டே வாய்க் கொப்பளி முகத்தை கழுவு முழுவதுமாய்; முகமொளிரும் முழுநிலவாய்.. கையால் நீரேந்தி முழங்கை வரை அந்நீரை ஓட விடு; புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..! தலையை நீரால் வாரிவிடு; தலையில் உட்கார்ந்துள்ள ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..! புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு; புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..! கரண்டை வரை கால்கள் இரண்டையும் கழுவி விடு; விரண்டோடிடுவான் விரட்டப்பட்ட ஷைத்தான்..!!! இறைவன் கட்டளைப்படியே "ஒளு" நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே.. தொழுகை: தொழுகையை நாடு; தூய்மையான இடம் தேடு..... "குறிப்பிட்ட நேரத்தின் குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி அல்லாஹ்வைத் தொழுவதாய்..." "நிய்யத்" என்னும் எண்ணத்தை நிர்ணயித்துக் கொண்டு, "அல்லாஹு அக்பர்" என்றே கைகளை உயர்த்தி விடு "இறைவனே பெரியவன்" என்று படி; சரணடைவதில் இதுவே முதற்படி நெஞ்சில் கைவைத்து; அஞ்சி தலை தாழ்த்தி; அஞ்சலை அனுப்பு "அல்-fபாத்திஹா" வரிகளில் "ஆமீன்" முத்திரைப் பதித்து கொஞ்சம் ஒதிடு இறை வசனம்; கெஞ்சும் குரலோடு உன் வதனம்.. "அல்லாஹு அக்பர்" என்றே பணிந்து போகும் எண்ணத்தில் குனிந்து முட்டுகளில் கைகள் படுக "தூயோனவனே புகழுக்குரியோன்" வாயால் வாழ்த்து பாடுக "அவனைப் புகழ்வதை கேட்பவன் அவனே" என்று சொல்லிய வண்ணம் தலை நிமிர்ந்து நிலைக்கு வந்து விடு "அல்லாஹு அக்பர்" என்றே கூறி முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய நெற்றியினைத் தரை மீது வைத்து வெற்றி என்னும் புதையல் பெற்றிடும் பேறு பெறுக; அரும்பின் தேனைச் சுவைத்திட விரும்பி மலருக்குள் சுருண்டு கிடக்கும் "சுரும்பு" என்னும் வண்டினைப் போல்.. இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்; இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!! "அல்லாஹு அக்பர்" என்றே கூறி சிறியதோர் இருப்பிலமர்ந்து பிரியமான அவனிடம் பிரியத்துடன் கேள்: "மன்னிபு;இரக்கம்; மண்ணில் வாழும் வரை இரணம்" "அல்லாஹு அக்பர்" என்றே கூறி மீண்டுமொரு முறை "சுஜூது"வின் சுகமேப் பெற்றிடவே ஆவலுடன் நெற்றியினைத் தரையில் வைத்து "தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து முதல் நிலையை முடித்த நிலையில்.. இரண்டாம் நிலைகு வரும் பொழுதும் "அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு அடுத்த நிலையில் நில்லு. இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்) இறைவனோடு தொடர்பு தொழுகை என்று துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ அதன் எண்ணிகை முடியும் இறுதி நிலையாம் "தஷ்ஹுத்" இருப்பில் அமருக இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும் நிறைவுடனே "மிராஜ்"ல் நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க.. மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும் இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும் இனிய ஸலாம் படித்து விடு; இனிதாய் தொழுகை முடித்து விடு. ஓர் அதிசயச்செய்தி: நீர் பட்டால் துருவாகும் நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........ "ஒளு"ச் செய்யும் நீர் உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!! இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி: யோகாசனம் போதிக்கும் ஆசான்கள் யாவரும் படம் போட்டு பாடம் நடத்தும் போழ்து சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி: "முஸ்லிம்கள் தொழுகையின் இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற அச்செய்தியினைப் படித்தேன்: "அல்லாஹ் நமக்கு அருளிய முழுமையான ஒர் அமல் தொழுகையின் நிலைகளே.. ஆஹா பரிபூரணமான யோகா..-என்றே உரியோனிடம் நன்றி கூறி மகிழ்ந்தேன்; "தீன்" என்னும் தேனைச் சுவைத்தேன்... அன்பான் குழந்தாய்..! அன்போடு அழைத்தேன் -"தீன்" என்னும் தேனைச் சுவைத்திடு தெரியாமல் உள்ளோரை அழைத்திடு -என்றும் அன்பு படர்ந்த இதயமுடன் -"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம் 00971-50-8351499 |
0 comments: on "ஒளுவும்; தொழுகையும்" பாடம்:"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?