இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 சோதனை தொகுப்பு பயன்படுத்திப் பார்க்க வந்துவிட்டதால் தற்போது இயங்கும் அனைத்து பிரவுசர்களையும் அலசிப் பார்த்து அவை தரும் குறிப்பிட்ட வசதிகளை ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. அவற்றை இங்கு தருகிறோம். விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் மார்க்கட்டில் தனியாக இலவசமாகக் கிடைப்பதுவும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதுமான பிரவுசர்களை எடுத்துக் கொண்டால் பயர்பாக்ஸ், ஆப்பரா மற்றும் குரோம் ஆகியவை முன் நிற்கின்றன.இந்த முறை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8னை வடிவமைத்து வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் எடுத்திருப்பது தெரிகிறது. ஏனென்றால் பதிப்பு 7க்குப் பின் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பக்கம் அதிகம் பேர் திரும்பினார்கள். இப்படித் திரும்பியவர்களை மீண்டும் தன் பக்கம் கொண்டு வர மைக்ரோசாப்ட் அதிக சிரமம் எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கென புதிய வசதிகளாக வெப் ஸ்லைசஸ், அக்ஸிலரேட்டர்ஸ் மற்றும் விசுவல் சர்ச் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சராசரியாக இணையத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை நிச்சயம் இந்த புது வசதிகள் எக்ஸ்புளோரர் பக்கம் கொண்டு வரும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. பிரைவேட் பிரவுசிங் மோட் என்னும் ஹிஸ்டரியைப் பதியாத முறையினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டு வந்தது. இது பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கிறது. ஆனால் ஆப்பராவில் இன்னும் தரப்படவிலை. ஆனால் இதனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது சபாரி பிரவுசர்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 இன்னும் சில குறைகளைக் கொண்டுள்ளது. இதனை டவுண்லோட் செய்திட கிளிக் செய்தால் இதன் பைல் சைஸ் நம்மைப் பயமுறுத்துகிறது. 16 எம்பி அளவில் பைல் இருந்தால் எவ்வளவு நேரம் டவுண்லோட் செய்வது? அத்துடன் அதன் பின் இன்ஸ்டால் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இன்ஸ்டால் செய்திட இது ஆன்லைன் இன்ஸ்டாலரைப் பயன்படுத்துவதால் இந்த நேரத்தைக் குறைத்திட வாய்ப்பில்லை. மேலும் இன்ஸ்டலேஷன் சமயத்தில் இருமுறை கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டியுள்ளது. மற்ற பிரவுசர்கள் குறைவான நேரத்தில் வேக வேகமாக இன்ஸ்டால் செய்திடுகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதிக நேரம் எடுத்துக் கொள்வது பலரின் ஆசை பாதியிலேயே திரும்பி விடுவதனைப் பார்க்க முடிகிறது. குறைந்தது 10 நிமிடம் எடுத்துக் கொள்ளும் இன்ஸ்டலேஷன் அனைத்து அப்டேட் பைல்களையும் தருகிறது. அதன் பின்னும் நீங்கள் அப்டேட் செய்திடவில்லை என்றால் எரிச்சலூட்டும் செய்திகள் வந்து உங்களை சலிப்படைய வைக்கிறது. இந்த தொந்தரவெல்லாம் பிற பிரவுசர்களில் இல்லை.மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் ரென்டரிங் இஞ்சினுடைய வேகத்தினை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மெதுவாகத்தான் இணையப் பக்கங்கள் இறக்கப்படுகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் வசதிகள் பெருகிக் கொண்டு சென்றாலும் மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றுக்காக மீண்டும் இதற்கு மாறுவார்களா என்பது சந்தேகமே.
பயர்பாக்ஸ் –3: பன்னாட்டளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இரண்டாவது இடத்தில் பயர்பாக்ஸ் –3 இடம் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்துபவர்களை அழகாக மெதுவாகத் தன் பக்கம் இழுத்திடும் பிரவுசராக இது இயங்குகிறது. இதன் சிறப்பு இதற்கென எழுதித் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் ஆட்– ஆன் தொகுப்புகளாகும். இந்த தொகுப்புகளினால் பயர்பாக்ஸ் ஒரு பிரவுசராகப் பார்க்கப்படாமல் ஒரு சிறந்த அப்ளிகேஷன் சாப்வேர் தொகுப்பாகப் பார்க்கப்படுகிறது என்பது உண்மையே. அண்மைக் காலத்தில் இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக நம்மிடம் இருப்பது பயர்பாக்ஸ் 3.0.5. இதற்கு அப்டேட் செய்வது மிக மிக எளிது. இதன் இன்ஸ்டலேஷன் பைல் அளவு 7 எம்பி மட்டுமே. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பைலின் அளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பு சோதனைத் தொகுப்பாகவே இன்னும் உள்ளது. இதில் பிரைவேட் பிரவுசிங் வசதி தரப்பட்டுள்ளது.ஆட் ஆன் தொகுப்புகள் வழியாகப் பல வசதிகள் கிடைக்கப்படுவது ஒரு சிறப்பு என்றாலும் பலரும் இதில் சிறப்பான வசதியாக அறிவித்துள்ளது இதன் எளிமையும் வேகமும் தான். எளிமை, பாதுகாப்பு, ஆட் ஆன் தொகுப்பு இதன் வலிமையான தூண்களாகும்.
ஆப்பரா 9.63: பிரவுசர்களில் நல்ல பிரவுசர் எது என்பதனைப் பார்க்கையில் வரிசையில் அடுத்து நிற்பது ஆப்பரா 9.63 ஆகும். இது பிரவுசர் மார்க்கட்டில் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும் இது தரும் வசதிகளும் சிறப்புகளும் ஒன்றும் குறைந்தது இல்லை. பல வல்லுநர்கள் தொழில் நுட்ப ரீதியில் இதனையே சிறந்த தொகுப் பாகக் கருதுகின்றனர்.பல வகை ஆட்–ஆன் தொகுப்புகளுடன் பயர் பாக்ஸ் தந்திடும் வசதிகளை ஆப்பரா தனியாகவே தருவ தாக கருதப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகளின் இடத்தில் ஆப்பரா பல விட் ஜெட்களைக் கொண்டுள்ளது. இதன் மவுஸ் பயன்பாடும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆப்பரா இன்னும் அதன் வேகத்திற்காகப் பாராட்டப்படுவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஸ்பீட் டயல், ஸ்கின்ஸ் மற்றும் முற்றிலும் புதிய பிரவுசர் இஞ்சின் போன்றவை இதன் மற்ற சிறப்புகளாகும்.
கூகுள் குரோம்: பிரவுசர் பயன்பாட்டில் அதிக அளவில் சலசலப்பினை ஏற்படுத்தியது கூகுளின் குரோம் பிரவுசராகும். செப்டம்பரில் இது வெளியான போது அனைவராலும் இது பேசப்பட்டது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிட்டதால் அதிக எதிர்பார்ப்போடு மக்கள் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தினார்கள். மேலும் இதன் வேகம் பலரை இதன் பால் இழுத்தது. ஆனால் அனைவரும் தொடர்ந்து அதிலேயே இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. இருப்பினும் இதன் வேகமும் வசதியும் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதன் எளிமையுடன் திரையில் இது தரும் பெரிய ஏரியா அனைவரையும் கவர்கிறது. தேவையற்ற டூல்பார்களை மறைத்து வைத்து நாம் பிரவுஸ் செய்திட அதிக இடம் தருவது குரோம் பிரவுசர்தான். டிசம்பரில் மீண்டும் நல்ல நிலையான பிரவுசரைத் தந்தது. இந்த பிரவுசரைப் பொறுத்த வரை இதன் சோதனைத் தொகுப்பு காலத்திலிருந்தே இது பிரைவேட் பிரவுசிங் வகையைத் தந்தது. தொடர்ந்து வேகமாக இயங்கி அதி வேகத்தில் இணையப் பக்கங்களைத் தருவதில் இன்னும் குரோம் முதல் இடத்தில் உள்ளது. இதுவும் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உள்ளதால் இதற்கும் ஆட் – ஆன் தொகுப்புகள் பல வரும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி பல நூறு ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கையில் குரோம் பயன்படுத் துபவர்களின் எண்ணிக்கை நிலையாக உயரலாம்.நீங்கள் எதனைப் பயன்படுத்துகிறீர்கள்? ஒரு சிலர் பாதுகாப்பிற்காக அனைத்தையும் மாறி மாறிப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலரோ தங்களுடன் பழக்க வழக்கத்தில் ஒன்றிவிட்ட பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள். எப்படி இருந்தாலும் நமக்கு என்ன வசதிகள் வேண்டுமோ, எதனை விரும்புகிறோமோ அதனையே தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இருப்பினும் அனைத்தையும் பழகி வைத்துக் கொள்வது நல்லதல்லவா!
0 comments: on "பிரவுசர்கள் ஓர் அலசல்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?