மனச்சோர்வுக்கு காரணம் பண இழப்பு - காதல் தோல்வி - ஏமாற்றம்- தொழிலின்மை- பெற்றோர் அன்பு இல்லாமை-தவறான சகவாசம் என்று பலவற்றைக் கூறலாம்.
மனச்சோர்வு தன்னம்பிக்கையை வளர்க்க உதவாது. பாராட்டுதல், மனச் சோர்வை போக்கும் பெரும் நன்கொடையாகும்.
வேலையின்றி வருந்தும் மனிதன்-தேர்வு எழுதும் குழந்தை முதலியவர்களை ஆறுதல் படுத்தும் முயற்சியில் கவலைப்படாதீர்கள், வெற்றி நிச்சயம் என்ற வார்த்தைகளை கூறுகிறோம்.
கவலை நம் உடலை பாதிக்கிறது. கவலை நமக்கு உதவியாக இருப்பதில்லை. தலைவலி- அலர்ஜி போன்றவற்றை தோற்றுவிக்கிறது.
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் என்று பாரதி பாடினார்.
சின்ன தோல்வி ஏற்பட்டவுடன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து சுக்கு நூறாக சிதைந்து போகாது உறுதிப்பாடான நெஞ்சை விழித்தெழச் செய்தால் வாழ்வு வசந்தமாகும்.
கிடைத்ததை விரும்பு
கஜினி முகம்மதுவின் எண்ணம் இந்தியாவை தன் வசப்படுத்துவது. எத்தனை தோல்விகளை கண்டார்? நாம் மட்டும் ஒரு முறை தோற்றவுடன் அடுத்த முறையும் தோல்விதான் என்று ஏன் நினைக்க வேண்டும்?
வாழ்க்கையில் எத்தனையோ அற்பப் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்து மனிதர்களை அலைக்கழிக்கின்றன. வரதட்சணை தற்கொலைகள் போன்ற மோசமான கலாச்சாரம் பெருகி வருகின்றன. வாழ்க்கையின் மதிப்பை உணராதவர்கள் தாம் இவர்கள்.
விரும்பியது கிடைக்க வில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.
துன்பங்களை சந்திப்பேன் என்ற மனோதைரியம் தான் புகழுக்கு காரணம். எனவே தடைவரும்போது மனமுடைந்து போதல் நல்லதன்று.
உற்சாகப்படுத்தும் முறை
அமெரிக்க பள்ளிகளில் ஒரு குழந்தை பரீட்சையில் எப்படி மார்க் வாங்கியுள்ளது என்பதை அந்த வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அது நன்றாக படிக்கிறதா? என்று முடிவு எடுப்பதில்லை. மாறாக முந்தைய பரீட்சையை விட இந்த பரீட்சையில் நன்றாக மார்க் வாங்கியுள்ளதா? என்று தான் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதுதான் மாணவர் களை சோர்வடையச் செய்யாது உற்சாகபடுத்தும் முறை.
சமுதாயத்தில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு ஆதரவும், ஆறுதல் மொழியும், வழிகாட்டுதலும் இருந்தால் முச்சந்திகளிலும், தியேட்டர்களிலும் வீணாகும் அவர்களின் சக்தி - திறமைகள் நன்முறையில் நெறிப்படும் என்பதில் ஐயமில்லை. இயற்கையை ரசிக்கக் கற்றால் இறுகிய மனமும் இளகி விடும். மனதிலே குதூகலம் உண்டாகும். மனம் கனமாக இருக்கும்போது மனதை எளிதாக்கும் கவிதைகளைப் படிக்கலாம். சிலருடைய சந்திப்பு நம்பிக்கையை ஊட்டலாம். மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும்போது அம் மகிழ்ச்சி இரட்டிப்பு மடங்காகிறது. அதைப் போலத்துயரம் அடைந்திருக்கும்போது ஒருவரிடம் பேசினால் அந்த துயரத்தின் சுமை குறைகிறது. நண்பர்கள் நமக்கு நல்ல ஆலோசகர் என்றே கூறலாம்.
எத்தனை வருஷம் ஆனாலும் பிறந்த வீட்டுக்குப் போய் மனம்விட்டு அம்மாவுடன் ஒரு பெண் பேச நினைப்பது எதற்காக? வயதான அம்மா பண உதவி செய்வாள் என்றா? இல்லை. அன்பாகப் பேசி-ஆறுதலாய் இருந்து மனநிறைவு தருவாள் என்றுதான் போகிறாள்.
சம்பாதிக்க முடியும்
பணம் எல்லாம் போய் ஏழையாகிவிட்டால் எப்படி சகித்துக்கொண்டீர்கள் என்று ஒருவரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில், வறுமையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்றார்.
எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் அடிப்படை காரணம் மனம். யானை மிகப்பெரிய மிருகம். சிங்கத்தைவிட உயரமானது. உடம்பு வலிமை வாய்ந்தது. ஆனால் சிங்கம் யானைக் கூட்டத்தையே விரட்டி ஓட்டம் பிடிக்க வைத்து விடுகிறது. காரணம் மனவலிமைதான். பெண்கள் ஆண்களை விட உடல் வலிமையால் குறைந்திருந்தாலும் மன வலிமையில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள்.
டாக்டர் அம்பேத்கரை வறுமை கோரப்பிடியும்-சாதியமும் இளம் பிராயத்திலே வாட்டினாலும் சோர்ந்து விடாது சவாலாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள கொல்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அம்பேத்கர் அவர்களின் வாழ்வைப் பாடமாகக் கொண்டு சோர்வு நீங்கி முன் னேற்றத்தில் நாட்டம் செலுத்தவேண்டும்.
0 comments: on "துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?